Friday, December 21, 2012

குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா- மூத்த கலைஞர்களையே மூக்கில் விரலை வைக்க வைக்கிறது

இசை உலா (டிச.20): அசத்திய மனோதர்மம்இன்றைய இளம் தலைமுறை கலைஞர்களில் குறிப்பிடப்படும்படியான திறமையும் வித்வத்தும் உள்ளவர்களில் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா முன்வரிசையில் நிச்சயம் இருப்பவர். அவருக்கு இருக்கும் அசாத்திய மனோதர்மம் மூத்த கலைஞர்களையே மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.
பதிவுசெய்த நாள் 20 December 2012 
_________________________________________________________________________
Dinamani

இசை உலா (டிச.20): அசத்திய மனோதர்மம்

First Published : 20 December 2012 05:12 AM IST
இன்றைய இளம் தலைமுறை கலைஞர்களில் குறிப்பிடப்படும்படியான திறமையும் வித்வத்தும் உள்ளவர்களில் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா முன்வரிசையில் நிச்சயம் இருப்பவர். அவருக்கு இருக்கும் அசாத்திய மனோதர்மம் மூத்த கலைஞர்களையே மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.
வொலேட்டி இளைஞராக இருக்கும்போது இருந்த உடல் வாகுவையும், மதுரை சோமுவின் அங்க அசைவுகளையும் நினைவுபடுத்தும் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் சங்கீதமாகட்டும் முழுக்க முழுக்க அவரது குரு பி.எஸ்.நாராயணசுவாமியின் அடிச்சுவட்டில் பயணிப்பது ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அவரது இசை நிகழ்ச்சிகளில் ஏதோ ஒரு கம்பீரமும் விறுவிறுப்பும் இயற்கையாகவே அமைந்துவிடுவது தனிச் சிறப்பு.
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் ஞாயிறு மாலை 4 மணிக்கு குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி. சஞ்சீவ் வயலின். சேர்த்தலை அனந்தகிருஷ்ணன் மிருதங்கம். பாபநாசம் சேதுராமன் கஞ்சிரா. "கல்யாணி' ராகத்தில் அமைந்த "வனஜாக்ஷி' என்கிற வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார் அவர். தொடர்ந்தது "சக்ரவாகம்' ராகத்தில் அமைந்த "சுகுணமுலே'. பெயருக்கு ஆலாபனை செய்துவிட்டு, பல்லவியில் கல்பனா ஸ்வரம் பாடி, மார்கழி முதல் நாள் என்பதால் "நாட்டை' ராகத்தில் "மார்கழி திங்கள்' திருப்பாவையை இசைத்தார்.
விஸ்தாரமாக "முகாரி' ராக ஆலாபனைக்குப் பிறகு தியாகய்யரின் "முரிபெமு' என்கிற சாகித்யம். முகாரிக்குப் பிறகு "வராளி'. சாகித்யம் சியாமா சாஸ்திரியின் "காமாக்ஷி'. "சுகசியாமளே சிவசங்கரி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு, கல்பனா ஸ்வரம் பாடினார். என்ன நினைத்தாரோ, தனியாவர்த்தனத்துக்கு இங்கேயே இடம் அளித்துவிட்டார்.
அடுத்தாற்போல, "கேதார கெüளை' ராகத்தில் ஆதி தாளம் திஸ்ர நடையில் அமைந்த ராகம், தானம், பல்லவி. எடுத்துக்கொண்ட பல்லவி "மந்தஹாச வதனா, ஹரே கிருஷ்ணா'. ராக ஆலாபனையிலும் சரி, நிரவல், கல்பனா ஸ்வரம் பாடுவதிலும் சரி, வேகமும் ஜிலுஜிலுப்பும் ஆங்காங்கே "சபாஷ், பலே' போட வைக்கும் அபாரமான பிடிகளும் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவை தனித்துவம் வாய்ந்த கலைஞனாக இனம் காட்டியது.
"மாண்ட்' ராகத்தில் "முரளிதர கோபால' பாடி தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பாலமுரளி கிருஷ்ணா. அளவுக்கு அதிகமான பிருகாவைப் போட்டு அதிலேயே லயித்துவிடவும் இல்லை. அதே சமயம் மிகவும் இழுத்து வலித்து தன்னையும் நம்மையும் சிரமப்படுத்தவும் இல்லை. எல்லாமே சரியான அளவில் சரியான கலவையில் இருப்பதுதான் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் வெற்றி.
அன்றைய கச்சேரியில் ஒரு தனிச் சிறப்பு இருந்தது. அவர் எடுத்துக்கொண்ட "சக்ரவாகம்', "முகாரி', "வராளி' போன்ற ராகங்கள் எல்லாமே ரக்தி ராகங்கள். அதாவது ஆரோஹண அவரோஹணங்கள் நன்றாகத் தெரியாவிட்டால் தப்பாகி விடும். அந்த ராகங்களுக்கு என்று சில லட்சணங்கள் உண்டு. ஏதோ பாடிவிட்டுப் போய்விட முடியாது. அந்த ராக லட்சணங்களை முழுமையாக வெளிக்கொணரும் திறமையில்லாதவர்கள் திருப்தியான சங்கீதத்தை தர முடியாது. இந்த சிறிய வயதில் மூன்று நான்கு ரக்தி ராகங்களைத் துணிந்து கச்சேரியில் ஒருவர் இசைக்கிறார் எனும்போதே அவரது தன்னம்பிக்கையையும் தேர்ச்சியையும் நிர்ணயித்துவிடலாம்.
முதல் பாராவை மீண்டும் படித்து பார்த்துக் கொள்ளவும்

No comments:

Post a Comment