சேவை அளிப்பது தாமதமானால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம்
_____________________________
புது தில்லி: Link http://dinamani.com/india/article1492676.ece
First Published : 08 March 2013 02:25 AM IST
பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள் உள்பட பொதுமக்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைக்கப்படுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலோ, அவர்களைத் தேவையில்லாமல் அலைக்கழித்தாலோ சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மூலம் அரசிடமிருந்து பொதுமக்கள் பெறும் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் நிர்வாகச் சீரமைப்பு இலாகா மூலம் இவை கண்காணிக்கப்படும். இதற்காக பொதுமக்கள் பங்களிப்போடு தகவல் மையம், உதவி மையம், சேவை மையம் போன்றவை அமைக்கப்பட்டு சேவைகளை குறித்த நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். சேவைகள் கால தாமதம் செய்யப்பட்டால் அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கவும், லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறுவதற்காக சேவை கால தாமதம் செய்யப்பட்டது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மாநில அல்லது மத்திய குறை தீர்ப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கிரிமினல் விசாரணை அல்லது லோக்பால் விசாரணைக்கும் மசோதா வழிசெய்கிறது.
இந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்ய ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை, 2012 ஜூன் மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும் மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வர வேண்டியிருந்ததால் இப்போதுதான் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment